இந்த நிகழ்வு நடந்து ஒரு இரண்டு வருஷம் இருக்குங்க. என் பள்ளி தோழியின் திருமணத்திற்காக கேரளாவிலுள்ள ஒரு ஒன்றியப் பகுதிக்கு (அதாங்க union territory) போயிருந்தேன். வெளியூரிலிருந்து வருபவர்கள் தங்குவதற்காக என் தோழியின் வீட்டார் ஒரு விடுதியில் ஏற்பாடு செய்திருந்தாங்க. நான் தங்கியிருந்த அதே விடுதியில இன்னொரு குடும்பமும் தங்கிருந்தாங்க. அவங்க என் தோழியின் குடும்ப நண்பர்களுனு பின்னர் தெரிந்துகொண்டேன்.
விஷயத்துக்கு வரேன். அந்த குடும்பதில்ல ஒரு பத்து அல்லது பதினோரு வயசுல ஒரு பையன் இருந்தான். அவன் ரொம்ப சேட்டை. சும்மா ஒரு இடதுல்ல இருக்கமாட்டான். அங்க ஓடுவான். எதையாவது நோண்டுவான். பத்தாத்துக்கு அவங்க அப்பாவும் அம்மாவும் இதை செய்யாதே அதை செய்யாதே சொல்லிகிட்ட இருப்பாங்க. அவனும் அதற்கு மாறாக எதையாவது செஞ்சுகிட்டே இருப்பான். சொல்றதை இரண்டு நாள் கேட்டு எனக்கே வெறுப்பாயிருச்சி. "அவன்தான் நீங்க சொல்றதே கேட்கமாட்டேன்றான். நீங்க ஏன் திரும்ப திரும்ப அதையே சொல்லிட்டு இருக்கீங்க?"ன்னு கேட்கலான்னு வாயெடுத்த பொது, எனக்கு ஒரு உண்மை புரிஞ்சது. அந்த அப்பா அம்மா ஏன் சதா அந்த பையனை "அதை செய்யாதே, இதை செய்யாதே, அங்க போகாதே, இங்க இரு"ன்னு சொல்லிகிட்ட இருக்காங்கன்னு ஒரு நிமிஷம் யோசித்துப்பார்த்தேன்.
அப்போ தான் எனக்கு புலப்பட்டது அவங்க அப்பா அம்மா மட்டுமில்ல இந்த உலகதுல்ல எல்லா அப்பா அம்மாவும் இப்படிதாங்க இருக்காங்க. அவங்க ஏன் அப்படி சொல்றாங்க? தான் பையனுக்கு எதாவது ஆயிடுமோ, கால்ல கையில்ல அடி பட்டுடுமோன்ற பயம். இந்த அறிவுரை சின்ன வயசுல மட்டும் இல்லங்க. அந்த பையன் பெருசாயி சில பேர் பையன் கல்யாணத்துக்கு அப்புறமும் புத்திமதி சொல்லிகிட்ட இருப்பாங்க. பையன் பத்தாவது வகுப்பு முடிச்சதும் எந்த படிப்பு பிரிவு எடுக்கணும்னு, +2 முடிச்சதும் எந்த பொறியியல் கல்லூரில சேரணும் - இப்படி எல்லாத்துக்குமே அறிவுரை அம்மா அப்பா கிட்டயிருந்து வந்துகிட்டே இருக்கும். இப்படி ஏன் சொல்றாங்கன்னு கொஞ்சம் யோசித்துபாருங்களேன். தான் பையன் எதுலேயும் தோற்கக்கூடாது, எதுலேயும் ஏமாந்துறகூடாது, கஷ்டபடகூடாது என்ற ஒரே காரணம் தான். புத்திமதி சொல்றது சரியா தப்பானு விவாதம் பண்ணவர்ல. ஆனா எதுக்கு சொல்றாங்கன்னு என் வாழ்க்கையல நடந்த ஒரு நிகழ்வை வைத்து இந்த ப்ளாக்கை எழுதுகிறேன்.
நான் பெங்களுருலிருந்து சென்னைக்கு வந்து வேலை சேர்ந்து ஒரு வருஷதுற்கு அப்புறம் என் பள்ளி பருவ நண்பன் ஒருத்தனை பல வருஷம் கழித்து ஒரு கல்யாணத்துல பார்த்தேன். அவன் என்கிட்ட தான் ஒரு சிறு தொழில் ஆரம்பிக்கபோறதாகவும் என்னை அதுல உழைக்கும் பங்காளியா சேர்துக்குறேன்னு சொன்னான். அதே வாரதுல்ல ஒரு நாள் என்னைக் கூப்பிட்டு தான் செய்ய போகிற வணிகத்தைப் பற்றியும் நான் பங்காளியா சேர்ந்தா எப்படி ரெண்டு பேரும் அந்த வணிகத்தை செய்யலாம்னு ரொம்ப நேரம் சொல்லிட்டுருந்தான். நான் யோசித்து ரெண்டு நாளைக்குள்ள என் முடிவை சொல்றேன்னு சொன்னேன்.
நம்மைவிட நம்ம அப்பா அம்மா பத்தி வேற யாருக்கும் நல்லாவே தெரியாது. ஆக எங்க அப்பா அம்மா இந்த வணிகத்துக்கு என்ன சொல்லுவாங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும். இருந்தாலும் அவங்க என்னதான் சொல்றாங்க கேட்கலாம்னு அவங்க கிட்ட என் நண்பன்னோட ஒரு வணிகம் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன் சொன்னேன். அது என்ன வணிகம் எப்படி செய்ய போறீங்கனுகூட கேட்கலை. "வேண்டாம், வணிகம் பண்றது ரொம்ப கஷ்டம், உனக்கு அதுல ஒண்ணும் தெரியாது, காசை வீணாக அதுல போட்டுட்டு ஏமாந்து போகதே" - இது தாங்க நானும் எதிர்பார்த்த அவங்க பதில்.
நான் என்னுடைய அனுபவத்தில்ல கத்துகிட்டது: வாழ்க்கையில வெற்றி எவ்வளவு முக்கியமோ தோல்வியும் அதே அளவு முக்கியம். என் பொறியியல் கல்லூரில் நடந்த எந்த ஒரு நேர்காணலேயும் நான் தேர்ந்து எடுக்கப்படவில்லை. என்னைப் போலவே தேர்ந்து எடுக்கபடாதே என் நண்பன்(அவன் பட்ட பெயர் சடை) அப்போ என்கிட்ட "மச்சி, நம்ம சரியான பாதையில்தான் போயிட்டுஇருக்கோம்"ன்னு சொன்னான். எனக்கு கடுப்பு. "என்னடா சொல்ற? நம்மளை ஒரு நிறுவனமும் தேர்ந்து எடுக்கலை ஆனா நீ என்னன்னா சரியான பாதையில்தான் போறோம்னு சொல்ற. எனக்கு ஒண்ணும் புரியல" ன்னு சொன்னேன். அவன் "மச்சி, வெற்றிக்கு முதல் படி தோல்வி. இப்போ நம்ம தோற்று இருக்கோம்ன அப்போ நம்ம சரியான பாதையில் தானே போயிட்டு இருக்கோம்னு அர்த்தம்." எனக்கு நடு மண்டையில அடிச்சது மாதிரி இருந்தது.
நிறைய தோல்வி சந்திக்க சந்திக்க தோல்வி எனக்கு நிறைய கற்றுத்தந்தது. Kenneth Ewart Boulding ரொம்ப அருமையா சொன்னாரு "Nothing fails like success because we don't learn from it. We learn only from failure." எவ்வளவு பெரிய உண்மைங்க இது. என்ன செய்தால் வெற்றி அடைய முடியும் என்பதை தெரிஞ்சிகிறது எவ்வளவு முக்கியமோ அதே அளவு என்ன செய்யலேனா தோல்வியடைய மட்டோம்ன்னு தெரிஞ்சிகிறது முக்கியம். Thomas Alva Edison சொன்னாரு "I will not say I failed 1000 times, I will say that I discovered 1000 ways that can cause failure." ஆனா பெற்றோர்கள் தங்க பிள்ளைகள் தோல்வியடைய கூடாதுன்னு அந்த பத்து வயசு பையனோட அப்பா அம்மா மாதிரி அறிவுரை சொல்லி அவங்க ஜெயிக்கவிடாமே தடுத்து கொண்டிருக்கிறார்கள். சந்தோஷ் சுப்பிரமணியம் படத்துல்ல வர அப்பா மாதிரி தங்களுக்கு எந்த வழியில வெற்றி கிடைச்சதோ அதே வழியில தங்க பசங்களையும் வழி நடத்துறாங்க. இது தப்பில்லை ஆனா அப்படி வந்த வெற்றிக்கு ருசி ரொம்ப கம்மி. என்னதான் செயற்கை முறையில ஒரு பழத்தை பழுக்க வைத்தாலும், தானாக பழுக்கிற பழத்துக்கு தான் ருசி அதிகம். தானாக தோற்று தானாக வெற்றி தான் அதிக சந்தோஷம் தரும் என்பது என்னோட தனிப்பட்ட கருத்து.
ஆக பெற்றோர்களே, உங்க பிள்ளைகளை அடிபட விடுங்க. தோற்க விடுங்க. அப்படி செய்தால் அவன் உங்களைவிட அதிகம் வெற்றி பெறுவான். அப்படி வெற்றிபெற்றால், அது உங்களுக்கு தானே பெருமை.
கூடுதல் செய்தி #1: நான் அந்த வணிகத்தை செய்தேனா இல்லையானு நீங்க கேட்கிறது எனக்கு கேட்குது. எங்க அப்பா அம்மாக்கு தெரியாமே அந்த வணிகத்தை சுமார் ஒரு வருஷம் செய்தேன். போட்ட காசை எடுத்ததுமில்லாமல் ஒரு மடங்கு முதலீட்டையும் எடுத்தேன். ஆனா அந்த வணிகத்துல நான் அடைந்த லாபம் இது இல்லங்க. ஒரு குழுவை எப்படி வழி நடத்தணும், எப்படி சக ஊழியரிடம் நடந்துகிடணும், எப்படி அவர்களை வேலை செய்ய ஊக்குவிக்கணும், குழு முயற்சி என்றால் என்ன, ஒரு குழுவில் பொறுமை எவ்வளவு முக்கியம் போல பல விஷயங்களை கற்றது தாங்க அந்த வணிகத்தில் நான் அடைந்த லாபம். இன்னொரு பெருமை என்னன்னா, அதுல வந்த காசு ஒரு பரிச்சியமில்லாத ஒரு ஒலியியற் பொறியியல் (audio engineering) மாணவனின் பரிட்சை கட்டணத்திற்கு உதவியதுதான்.
கூடுதல் செய்தி #2: இந்த ப்ளாக்யை தமிழில் எழுத www.eudict.com என்ற இணைய தளத்திற்கு பெரும் பங்குண்டு. சில சிரமம்மான ஆங்கில வார்த்தைகளுக்கு தமிழ் வார்த்தையை கண்டுபிடிக்க இந்த இணைய தளம் உதவியது.
கூடுதல் செய்தி #3: அண்மையில் குள்ளநரி கூட்டம் படத்தைப் பார்த்தேன். ஒரு நல்லவர் 'படம் ஒரு தடவை பார்க்கலாம்'னு சொன்னதால் பார்த்தேன். முடிவில் ஏன் பார்த்தோம்னு ஆகிவிட்டது. அவ்வளவு கடுப்பு. இதுவும் ஒரு சராசரி தமிழ் படம் தான். பெருசா ஒண்ணுமில்லை.
That was a good read Barney.. :)
ReplyDeleteThanks Hari!
ReplyDelete