Thursday, July 26, 2012

தமிழ் மொழி - பாகம் II

அண்மையில் ஒரு தமிழ் பத்திரிகையை படித்துக்கொண்டிருந்தேன். அதில் தெரிவோம் தெளிவோம் என்ற பகுதியில் சில தமிழ் சொற்களில் பெயர் காரணங்களையும் எப்படி அவைகளை தவறாக அர்த்தம் கொள்ளபடுகிறது என்பதையும் கூறியிருந்தார்கள். அவை பயனுள்ளதாக இருந்தால் அவைகளில் சிலவற்றை இப்பதிவில் பகிர்கிறேன்.

சலம்
மலைகளிலும், அருவிகளிலும், ஓடைகளிலும் சலசலவென ஒலி எழுப்பி ஓடி வருவதாலும், ஒலி எழுப்பிக் கீழே விழுவதாலும் அத்தண்ணீர் காரணப் பெயராகச் சலம் ஆயிற்று. எனினும், நம்மில் பெரும்பாலோர் ஜலம் என்பது வடமொழியின் மூலச்சொல் என்றும், அதனைத் தமிழ்ப்படுத்திச் சலம் என்று எழுதுவதாகவும் கருதுகின்றனர்.

சம்பந்தி
பெண்ணோ, ஆணோ எடுத்த அல்லது கொடுத்த வீட்டுக்காரர்களைச் சம்பந்தி என்றே ஆழைக்க வேண்டும். சம் = நல்ல, பந்தம் = உறவு, சம்பந்தம் = நல்லுறவு, சம்பந்தி = நல்லுறவுக்காரர். சம்பந்தம் உற்றவரே சம்பந்தி ஆவார். எனினும், நம்மில் பெரும்பாலோர் சம்மந்தி என்றே தவறாக வழங்கி வருகிறார்கள். இதன்படிப் பார்த்தால் சம்மந்தி என்பதற்கு நல்ல குரங்கு என்பதே பொருளாகும். சம் = நல்ல, மந்தி = குரங்கு.

வெற்றிலை
வெறும்+இலை, வெற்று+இலை = வெற்றிலை. எந்த ஒரு செடியும், கொடியும், மரமும் பூத்துக் காய்த்துக் கனியும் தன்மை உடையனவாகவே இருக்கும் என்பது இயற்கை. ஆனால் பூக்காமலும், காய்க்காமலும், வெறும் இலையை மட்டுமே நேரிடையாகத் தருவதால் இது வெற்றிலை (வெறும் இலை, வெற்று இலை என்ற பொருளில்) ஆயிற்று.

வாழை
அந்த மரத்தின் பட்டை வழுவழு என்று இருப்பதால் (வழு-வழு-வாழ) அது வாழை ஆயிற்று. மேலும், நம்மால் ஓர் இடத்தில் ஒரு புதிய கன்று வைக்கப்பட்டால் அதுவே பின் தொடர்ந்து வாரிசு முறையில் இயல்பாகத் தனக்குத்தானே மூலமாகவும், முதலாகவும் இருந்து கன்று ஈன்று கொண்டே வாழ்ந்து வருவதாலும், வாழ்ந்து விடுவதாலும் அது வாழை ஆயிற்று.  நாம் தென்னையோ, பனையோ வைத்தால் நாம் வைத்த அந்த மரம் ஒன்று மட்டுமேதான் வளரும். அதற்குப் பின் தொடர்ச்சியாக வாரிசு முறையில் இயல்பாக எந்த மரமும் வளராது - தொடராது. ஆனால் வாழை அப்படி அல்லவே! எனவேதான், இது தொடர்ந்து வருவதால் - வாழ்வதால் வாழை ஆயிற்று.

மிளகாய்
மிளகாய் என்பது தமிழ்நாட்டில் அறிமுகமான - உற்பத்தியான பொருள் அன்று. உறைப்புச் சுவை உடைய இந்தப் பொருள் இன்றைக்குச் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு சில்லி நாட்டிலிருந்து முதன்முதலாக நம் நாட்டில் அறிமுகமானது. ஆனால் தமிழர்கட்குக் காரச்சுவை உடையதாக விளங்கிய முதன்மையான சொந்த உற்பத்தி விளைபொருள் மிளகே ஆகும். கார்ச்சுவையோடு வந்த அந்த வெளிநாட்டுப் பொருளைத் தம் தமிழ் நிலைக்கு ஏற்ப மிளகுக்காய் என வழங்கினர், இதுவே காலப்போக்கில் மிளகாய் (மிளகுக்காய்) ஆயிற்று. மிளகாய்க்கு ஆங்கிலத்தில் சில்லி என்றுதானே பெயர். பிறகுதான் மிளகாய் தமிழக விளைபொருளும் ஆனது.

சோமாஸ்
சோமாஸ் என்பது ஒரு தின்பண்டத்தின் பெயர் ஆகும். நிலவுக்குச் சோமன் என்ற ஒரு வேறு பெயரும் உண்டு. நிலவு வளைந்து இருக்கும். அதுபோல வளைந்து இருக்கும் அத்தின்பண்டம் சோமாஸ் ஆயிற்று. இந்தச் சோமாஸிலிருந்து வந்த புதிய தின்பண்டம்தான் சமோசா. ஆம் பழைய தின்பண்டம் - சோமாஸ்; புதிய தின்பண்டம் - சமோசா.

மூலம்: அணுவிரதம் ஏப்ரல் 2012

No comments:

Post a Comment